கோவில்பட்டியில் ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
கோவில்பட்டியில் ஜவுளிக்கடையில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுரோடு காளியப்பன் காம்பவுண்டில் குடியிருப்பவர் தேன்மொழி (வயது 61). இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கட்டிடத்தின் கீழ்தளத்திலும், மாடியிலும் ஜவுளிக்கடை இயங்கி வந்தது. தேன்மொழி மற்றும் அவருடைய குடும்பத்தினர் கடையை கவனித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேன்மொழி வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜவுளிக்கடையின் மேல் தளத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனை பார்த்த அப்பகுதியினர் இதுகுறித்து கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அதிகாரி இசக்கி தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேல் தளத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்துக் கொண்டிருந்த சமயத்தில், கடையின் கீழ்தளத்தை திறக்க முயன்றனர். ஆனால் ஷட்டர் திறக்க முடியாமல் லாக் ஆனது. இதனால் கீழ்தளத்திலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஷட்டர் உடைத்து எடுக்கப்பட்டது.
சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் இதில் கடை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்தினால் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இதுபற்றி கோவில்பட்டி கிழக்கு போலீசில் தேன்மொழி புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் சுதேசன் விசாரணை நடத்தி வருகிறார். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story