மண் மாதிரிகளை ஆய்வுக்கு கொடுக்க வேண்டும் வேளாண்மை அதிகாரி தகவல்


மண் மாதிரிகளை ஆய்வுக்கு கொடுக்க வேண்டும் வேளாண்மை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 May 2019 10:15 PM GMT (Updated: 16 May 2019 5:50 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 30-ந்தேதிக்குள் மண் மாதிரிகளை ஆய்வுக்கு கொடுக்க வேண்டும் என்று வேளாண்மை அதிகாரி சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் 350 வருவாய் கிராமங்கள் உள்ளன. தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கிராமங்களில் மண் வளத்தை மேம்படுத்தவும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் மண் மாதிரிகளை எடுத்துக்கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் வேளாண்மை அதிகாரி (மண்மாதிரி ஆய்வு மையம்) சம்யுக்தா கூறியதாவது:-

விவசாயிகளின் நிலங்களில் உதவி வேளாண்மை அலுவலர்கள் மண் மாதிரிகளை எடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 3 இடங்களில் மேல்மண்ணை 12 விதமான மண் மாதிரி எடுக்க வேண்டும். அதை தவிர 25 சென்டி மீட்டர் ஆழத்தில் 2 இடங்களிலும், 50 சென்டிமீட்டர் ஆழத்தில் 2 இடங்களிலும் என்று மொத்தம் 16 மண் மாதிரிகளை எடுக்க வேண்டும்.

இந்த மாதிரிகளை வருகிற 30-ந்தேதிக்குள் திருப்பூரில் உள்ள மண் மாதிரி ஆய்வு அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி இந்த மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. ஏற்கனவே எங்கள் அலுவலகத்தில் கடந்த 2016-17 ம் ஆண்டு மற்றும் 2017-18-ம் ஆண்டுகளில் இதே மண் மாதிரிகளை ஆய்வு செய்த அறிக்கைகள் உள்ளன. அவற்றுடன் இந்த ஆய்வு முடிவு ஒப்பிட்டு பார்க்கப்படும் இதில் மண்ணில் ஏற்கனவே இருந்த சத்துகள் குறைந்துள்ளனவா? அல்லது அதிகரித்துள்ளனவா? என்று கண்டறியப்பட்டு அதற்கு தகுந்தவாறு விவசாயிகளுக்கு உரங்கள் பரிந்துரைக்கப்படும். இதனால் தேவையான உரங்களை தேவையான அளவு மட்டுமே வாங்கும் நிலை ஏற்படுவதால் விவசாயிகளுக்கு வீண் செலவு குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story