உயர்அழுத்த மின்கம்பி அறுந்ததால் 75 வீடுகளில் மின்மீட்டர் எரிந்து நாசம் தொலைக்காட்சி பெட்டிகளும் சேதம்


உயர்அழுத்த மின்கம்பி அறுந்ததால் 75 வீடுகளில் மின்மீட்டர் எரிந்து நாசம் தொலைக்காட்சி பெட்டிகளும் சேதம்
x
தினத்தந்தி 17 May 2019 5:00 AM IST (Updated: 16 May 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

சேவூர் அருகே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து, வீடுகளுக்கு செல்லும் மின்கம்பி மீது விழுந்ததால், 75 வீடுகளில் மீட்டர்கள் எரிந்து நாசம் ஆனது. மேலும் தொலைக்காட்சி பெட்டிகளும் சேதம் அடைந்தன.

சேவூர்,

சேவூர் அருகே ஆலத்தூர் ஊராட்சி சத்தியா நகர் ஆதிதிராவிடர் காலனியில் 100-க்கு மேற்பட்ட வீடுகளில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் தனியார் நூற்பாலையும் செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலைக்கு ஆதிதிராவிடர் காலனி வழியாக உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது. அதாவது நூற்பாலைக்கு மின்சாரம் கொண்டு செல்ல தனியாக மின்கம்பம் நடவு செய்யவில்லை. மாறாக அங்குள்ள மின்கம்பத்தின் உச்சியில் உள்ள கிளாம்புகளில் நூற்பாலைக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பியும், அதற்கு சற்று கீழே ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் தாழ்வு அழுத்த மின்கம்பியும் செல்கிறது.

இந்த நிலையில் நேற்று காலை நூற்பாலைக்கு செல்லும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென்று அறுந்து, அதே மின்கம்பங்களில் கீழ் பகுதியில் வீட்டு உபயோகத்திற்கு செல்லும் தாழ்வு அழுத்த மின்கம்பி மீது விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள மின் கம்பங்களில் பிங்கான் உடைந்து மின் கம்பிகள் துண்டு துண்டாக கீழே விழுந்தது.மேலும் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து, வீடுகளின் பயன்பாட்டிற்கு செல்லும் மின்கம்பி மீது விழுந்ததால், திடீரென்று வீடுகளில் மின் அழுத்தம் அதிகமாகி 75-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மின் மீட்டர்கள் எரிந்து நாசமாகியது. மேலும் 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் கருகி சேதமடைந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த 6 மாதத்திற்கு முன்பு நூற்பாலைக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பி துண்டாகி, வீட்டு மின் இணைப்புகள் மீது விழுந்ததால், மின் மீட்டர்கள், தொலைக்காட்சிப்பெட்டிகள், மின் விசிறி உள்ளிட்ட மின் சாதனப்பொருள்கள் எரிந்து சேதமானது. இதையடுத்து மின் சாதன பொருட்கள் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், நூற்பாலைக்கு செல்லும் உயர் அழுத்த மின் பாதையை மாற்று வழியாக கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் உயர் அழுத்த மின் பாதையை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க, இடம் தேர்வு செய்து மதிப்பீடு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் வீட்டு பொருட்கள் சேதமடைந்ததையும் கணக்கிட்டு, கலெக்டருக்கு பரிந்துரை செய்து நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அதே சம்பவம் நடந்துள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு அன்னூர் மின்வாரிய அதிகாரி வினோதினி சென்று பார்வையிட்டார். அப்போது அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சேதமடைந்த வீட்டு மின் மீட்டர்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் நூற்பாலைக்கு செல்லும் உயர் அழுத்த மின் கம்பியும் துண்டிக்கப்படும் எனவும் மின்வாரிய அதிகாரி தெரிவித்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story