குன்னத்தூர் அருகே வீடு புகுந்து நகையை திருடிய தொழிலாளி கைது
குன்னத்தூர் அருகே வீடு புகுந்து நகையை திருடிய கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
குன்னத்தூர்,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூரை அடுத்த குன்னத்தூர் அருகே வெள்ளிர வெளியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 24). இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் கதிரேசன்(28). இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று கதிரேசன் கட்டிட வேலைக்கு சென்று விட்டார். பின்னர் அவர் வீடு திரும்பிய போது அங்கு இருந்த தங்க நெக்லஸ், தங்க வளையல் உள்ளிட்ட 2½ பவுன் நகைகளை காணவில்லை. வீட்டின் பூட்டும் உடைக்கப்படவில்லை. இதனால் கதிரேசன் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த திருட்டில் நன்கு அறிமுகமானவரே திருடி இருக்க கூடும். வீட்டு பூட்டு உடைக்கப்படாததால் தான் வேலைக்கு சென்ற பிறகு மறைத்து வைத்து இருக்கும் சாவியை யாரோ எடுத்து கைவரிசை காட்டி இருக்கிறார்கள். இது குறித்து அந்த பகுதியில் வசிக்கும் உறவினர் பாப்பாத்தியிடம், கதிரேசன், தனது வீட்டுக்கு யாராவது வந்தார்களா? என கேட்டதற்கு 2 நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வன் வந்து சென்றதாக தெரிவித்தார். இது குறித்து கதிரேசன் குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசாரிடம் தமிழ்செல்வன் மீது சந்தேகிப்பதாக அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் தமிழ்செல்வனை பிடித்து தங்கள் பாணியில் விசாரித்த போது வீடு புகுந்து நகையை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அதோடு அந்த நகையை குன்னத்தூர்-ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.49 ஆயிரத்துக்கு அடகு வைத்து பணம் பெற்று கொண்டதாகவும் தெரிவித்தார். தான் கைவரிசை காட்டியது கதிரேசனுக்கு தெரிய கூடாது என்பதற்காக அவருடன் வழக்கம் போல் வேலைக்கு சென்று வந்ததாக கூறினார்.
இதையடுத்து தமிழ்செல்வனை போலீசார் கைது செய்து அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story