தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு கள்ளத்துப்பாக்கி தயாரித்தவர் கைது


தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு கள்ளத்துப்பாக்கி தயாரித்தவர் கைது
x
தினத்தந்தி 17 May 2019 3:30 AM IST (Updated: 17 May 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே கள்ளத்துப்பாக்கி தயார் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது ஏணிபண்டா கிராமம். இந்த கிராமத்தில் சிலர் கள்ளத்துப்பாக்கி தயார் செய்வதாக தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் மற்றும் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 50) என்பவர் தனது வீட்டில் 100-க்கும் மேற்பட்ட கள்ளத்துப்பாக்கி செய்வதற்கான உதிரி பாகங்களை அடுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் கள்ளத்துப்பாக்கிகளை தயாரித்து அதனை கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு கொண்டு சென்றும், அந்த மாநிலங்களை சேர்ந்த பலர் இங்கு வந்து கள்ளத்துப்பாக்கிகளை வாங்கி செல்வதும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கள்ளத்துப்பாக்கி செய்ய பயன்படுத்திய உதிரிபாகங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை அருகே கள்ளத்துப்பாக்கி தயார் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story