வில்லியனூரில் பரபரப்பு கடைக்காரரிடம் மாமூல் கேட்டு ரவுடி மிரட்டல் கைது செய்யக்கோரி வியாபாரிகள் திடீர் மறியல்
வில்லியனூரில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை கைது செய்யக் கோரி கடைகளை அடைத்து வியாபாரிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசாரையும் அந்த ஆசாமி ஆபாசமாக பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வில்லியனூர்,
புதுவையில் ரவுடிகளை ஒடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் ரவுடிகள் மாமூல் வேட்டையில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது.
வில்லியனூர் அண்ணா சிலை அருகே அண்ணன்-தம்பிகளான சண்முகம், சிவா ஆகியோர் மளிகைக் கடை நடத்தி வருகிறார்கள். இவர்களது கடைக்கு நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த ரவுடி சாந்தமூர்த்தி என்பவர் குடிபோதையில் சென்று பொருட்கள் வாங்கினார். அதற்கு பணம் தராததுடன் மேலும் கடைக்காரரிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து தட்டிக்கேட்ட கடை ஊழியர்களை சாந்தமூர்த்தி தாக்கினார்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அங்கு நின்று கொண்டிருந்த சாந்தமூர்த்தியை பிடிக்கச் சென்றனர். ஆனால் போலீசாரை அவர் ஆபாசமாக திட்டி, தாக்க முயன்றார். அப்போது அந்த கடைக்கு வந்த அரசியல்வாதி ஒருவர் போலீசாரிடம் சமரசம் செய்தார். இந்தநிலையில் அங்கிருந்து சாந்தமூர்த்தி தப்பிஓடி விட்டார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்தநிலையில் வில்லியனூரில் வியாபாரியை மிரட்டிய ரவுடியை கைது செய்யக்கோரி வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று போலீசில் புகார் மனு கொடுத்தனர். மேலும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வலியுறுத்தி நேற்று கடை அடைப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தினார்கள்.
சுல்தான் பேட்டையில் இருந்து கோட்டைமேடு வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. வியாபாரிகள் அனைவரும் வில்லியனூர் மூலக்கடை சந்திப்பில் திரண்டனர். அங்கு புதுவை வணிகர் சங்க தலைவர் சிவசங்கரன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் ஊர்வலமாக வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கு வியாபாரிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோஷமிட்டனர். போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதனை சந்தித்து புகார் செய்தனர். இதன்பின் வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து ரவுடி சாந்தமூர்த்தி, மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதி ஆகிய இருவர் மீதும் வில்லியனூர் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story