மாவட்ட செய்திகள்

அரவக்குறிச்சி தொகுதியில் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு 8 இடங்கள் அனுமதி + "||" + Allow 8 seats for the final campaign of MK Stalin in Aravakurichi constituency

அரவக்குறிச்சி தொகுதியில் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு 8 இடங்கள் அனுமதி

அரவக்குறிச்சி தொகுதியில் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு 8 இடங்கள் அனுமதி
அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய 8 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக தி.மு.க. வேட்பாளர் கூறினார்.
அரவக்குறிச்சி,

தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த தொகுதிகளில் தங்கள் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.


அதன்படி இந்த தொகுதிகளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இதில் முதல் கட்ட பிரசாரத்தின்போது அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து 2 நாட்கள் தீவிர பிரசாரம் செய்து, வாக்கு சேகரித்தார். 2-வது கட்ட பிரசாரத்தை ஓட்டப்பிடாரத்தில் தொடங்கிய அவர் நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் தொகுதியிலும், நேற்று சூலூர் தொகுதியிலும் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

4 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது. இதனால் இன்று தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இதையொட்டி இன்று காலை தடாகோவிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கி வாவிகனம், ஈசநத்தம், இந்திரா நகர், சின்னதாராபுரம், தென்னிலை, பரமத்தி, நொய்யல், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய 12 இடங்களில் அவர் பிரசாரம் செய்வதற்காக அனுமதி கேட்டு ஆன்லைன் மூலம் தி.மு.க. சார்பில் ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட் பாளர் ஜோதிமணி மற்றும் தி.மு.க. நிர்வாகிகளுடன் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம், மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கான அனுமதி குறித்து கேட்டார். அப்போது தடாகோவில், வாவிகனம், ஈசநத்தம், இந்திராநகர் ஆகிய 4 இடங்களில் ஸ்டாலின் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி கூறினார்.

அப்போது செந்தில்பாலாஜி, ‘நீங்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். ஸ்டாலின் பிரசாரத்திற்கு நாளை (இன்று) மாலை வரை அனுமதி வழங்க வேண்டும்‘ என்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கூறினார். இதையடுத்து காலை 11 மணி முதல் அந்த அறையிலேயே செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் காத்திருந்தனர். மாலையில் கட்சியினர் வாங்கி வந்த உணவை செந்தில்பாலாஜி மற்றும் ஜோதிமணி ஆகியோர் அருகில் உள்ள அறையில் வைத்து சாப்பிட்டனர்.

பின்னர் இரவு வரை அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையிலேயே இருந்தனர். இதற்கிடையே அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து செந்தில்பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது;-

இறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய 12 இடங்களுக்கும், கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் செய்யும் 28 இடங்களுக்கும் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருந்தோம். மொத்தம் 40 இடங்களில், 4 இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணைய நடைமுறையின்படி 36 மணி நேரத்திற்கு முன்பாக அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது சம்பந்தமான எழுத்துப்பூர்வமான கடிதத்தை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் வழங்க வேண்டும். ஆனால் அப்படி வழங்கவில்லை.

4 இடங்களை தவிர எஞ்சியிருக்கிற இடங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவல்துறை சார்பில் இறுதி முடிவு எடுக்காமல், வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருகின்றனர். இறுதிக்கட்ட பிரசார பணிகளை நாங்கள் மேற்கொள்ளக்கூடாது என்பதில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தால் எங்களுடைய அடுத்த கட்ட நகர்வுக்கு சென்று விடுவோம்.

நாங்கள் மக்களை சந்திக்கக்கூடாது, பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்பது ஆளுங்கட்சியின் இலக்கு. இந்த தேர்தலில் பிரசார அனுமதி தொடர்பாக எங்கள் தலைமையுடன் கலந்து பேசி, நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது சம்பந்தமாக ஆலோசித்து வருகிறோம். அரசு எந்திரம் முழுக்க, முழுக்க ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

காவல்துறை அதிகாரிகள் மேலே கேட்டு சொல்கிறோம், என்கிறார்கள். அது யார் என்பது தெரியவில்லை. நாங்கள் யாரையும் சிறைபிடிக்கவில்லை. அனுமதிக்காக நாங்கள் காத்துக்கொண்டிருகிறோம். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு தகுந்த சரியான பாடத்தை தேர்தலில் மக்கள் கற்பிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் இரவு சுமார் 8 மணியளவில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள சின்னதாராபுரம், தென்னிலை, க.பரமத்தி, நொய்யல் என மேலும் 4 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மொத்தம் 8 இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வதற்கான அனுமதி கடிதத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி, செந்தில்பாலாஜியிடம் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட அவர், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் அங்கிருந்து சென்றார். மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்பட 4 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.