ஆத்தூர் தி.மு.க. பிரமுகர் தற்கொலை: போலீஸ் ஏட்டு இடமாற்றம் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டரிடம் விசாரணை


ஆத்தூர் தி.மு.க. பிரமுகர் தற்கொலை: போலீஸ் ஏட்டு இடமாற்றம் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டரிடம் விசாரணை
x
தினத்தந்தி 17 May 2019 4:00 AM IST (Updated: 17 May 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்தது தொடர்பாக போலீஸ் ஏட்டு இடமாற்றம் செய்யப்பட்டார். துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டரிடமும் விசாரணை நடந்தது.

ஆத்தூர், 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 49). தி.மு.க. பிரமுகரான இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் பணம் பெற்றுக்கொண்டு பலர் திருப்பி தரவில்லை. மேலும் கடன் வாங்கிய ஒருவர் பிரேம்குமார் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தன்னை போலீசார் மிரட்டியதாக கூறி பிரேம்குமார் கடந்த 14-ந் தேதி தனது வீட்டில் விஷம் குடித்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மறுநாள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து பிரேம் குமாரின் உறவினர்களும், நண்பர்களும், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீதும், அவரை மிரட்டிய போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது உறவினர்களிடம் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து பிரேம்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு தகனம் செய்யப்பட்டது.

இதன்பின்னர் நேற்று காலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார். பிரேம்குமாரின் தம்பி செந்தில் குமார், மகன் அரவிந்தன் ஆகியோரிடம் அவர் விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில், இந்த புகார் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு ஏட்டு பழனிவேல் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், புகார் கூறப்பட்ட ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜு, போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையில், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு பாதுகாப்பு பணிக்கு திடீரென அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பை ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் கூடுதலாக கவனித்து வருகிறார்.

பிரேம்குமாரிடம் கடன் வாங்கி விட்டு ஏமாற்றிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story