கருங்கல் அருகே கோவில்களில் திருடிய 2 பேர் கைது


கருங்கல் அருகே கோவில்களில் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2019 4:30 AM IST (Updated: 17 May 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே கோவில்களில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருங்கல்,

குளச்சல் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அதைதொடர்ந்து அவர்களை போலீஸ்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்களுக்கு கருங்கல் போலீஸ்நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. பின்னர், 2 பேரையும் தனிப்படையினர் கருங்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கருங்கல் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஒருவர் பூதப்பாண்டியை அடுத்த தெள்ளாந்தி பகுதியை சேர்ந்த நாராயணன் என்ற உண்டியல் நாராயணன்(வயது 70) என்றும், மற்றொருவர் தூத்துக்குடி சத்தியாநகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ராமர்(42) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் கருங்கல் அருகே கண்ணன்விளை பகுதியில் கிறிஸ்தவ ஆலயம், பாலூர் பகுதியில் தர்ம சாஸ்தா கோவில் உள்ளிட்ட குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடியதும் தெரியவந்தது.

இவர்கள் கோவில்களை மட்டுமே குறிவைத்து திருடி வந்துள்ளனர். திருடச் செல்லும்போது அதற்கென்று கருவிகளை கொண்டு செல்வதில்லை. அருகில் கிடக்கும் கற்களை கொண்டே உண்டியலை உடைத்து திருடி உள்ளனர். அதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story