சுட்டெரிக்கும் வெயில், தினமும் 2 மணி நேரம் ஆனந்த குளியல் போடும் ஆண்டாள் கோவில் யானை


சுட்டெரிக்கும் வெயில், தினமும் 2 மணி நேரம் ஆனந்த குளியல் போடும் ஆண்டாள் கோவில் யானை
x
தினத்தந்தி 17 May 2019 3:27 AM IST (Updated: 17 May 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

கொளுத்தும் வெயிலை தொடர்ந்து தினமும் 2 மணி நேரம் ஆண்டாள் கோவில் யானை குளித்து மகிழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

அக்னி நட்சத்திர காலம் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. காலை 8 மணிக்கு கொளுத்த ஆரம்பிக்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. வெயில் சுட்டெரிக்கும்போது லேசாக காற்று வீசினாலும் அதில் அனல் பறக்கிறது. மதிய வேளைகளில் நகரின் முக்கிய பகுதிகளில் வெயில் கொடுமை காரணமாக மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக உள்ளது.

இந்த வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வெயில் தாக்கம் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளையும் கடுமையாக பாதிக்கிறது.

கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெய மால்யதா காலை தினமும் 2 மணி நேரம் குளித்து மகிழ்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை காலத்துக்கு முன்னர் ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீரில் குளித்து மகிழ்ந்து வந்த நிலையில் கோடையை சமாளிக்கும் வகையில் 2 மணி நேரம் யானையை பாகன்கள் குளிக்க வைக்கின்றனர். வெப்பத்தை தணிக்க யானை ஆனந்த குளியல் போடுகிறது.

இது குறித்து பக்தர்கள் கூறும்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் உள்ள யானைகளுக்கு ‘ஷவர்‘ அமைத்துக் கொடுத்து குளிக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது, அதுபோல் ஆண்டாள் கோவில் யானைக்கும் ஷவர் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story