திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 19-ந் தேதி வாக்குப்பதிவு


திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 19-ந் தேதி வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 16 May 2019 11:30 PM GMT (Updated: 16 May 2019 11:30 PM GMT)

இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

மதுரை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபையில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்றது.

மீதம் உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும், நாடாளுமன்றத்துக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந் தேதி தொடங்கியது. மனு தாக்கல் 29-ந் தேதி முடிவடைந்து, மறுநாள் பரிசீலனை நடைபெற்றது. கடந்த 2-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ்.முனியாண்டி (அ.தி.மு.க.), டாக்டர் சரவணன் (தி.மு.க.), மகேந்திரன் (அ.ம.மு.க.), சக்திவேல் (மக்கள் நீதி மய்யம்), ரேவதி (நாம் தமிழர்) உள்பட 37 வேட்பாளர்களும், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் வி.வி.செந்தில்நாதன் (அ.தி.மு.க.), வி.செந்தில்பாலாஜி (தி.மு.க.), சாகுல் அமீது (அ.ம.மு.க.), மோகன்ராஜ் (மக்கள் நீதி மய்யம்), பா.க. செல்வம் (நாம் தமிழர்) உள்பட 63 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் வி.பி.கந்தசாமி (அ.தி.மு.க.), பொங்கலூர் பழனிசாமி (தி.மு.க.), சுகுமார் (அ.ம.மு.க.), மயில்சாமி (மக்கள் நீதி மய்யம்), விஜயராகவன் (நாம் தமிழர்) உள்பட 22 பேரும், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் மோகன் (அ.தி.மு.க.), சண்முகையா (தி.மு.க.), சுந்தரராஜ் (அ.ம.மு.க.), காந்தி (மக்கள் நீதி மய்யம்), அகல்யா (நாம் தமிழர்) உள்பட 15 பேரும் போட்டியிடுகிறார்கள்.

இடைத்தேர்தல் நடைபெறும் இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.), பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க.), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி) ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர்.

அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்களும், வேட்பாளர்களும் மும்முரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

4 தொகுதிகளிலும் நடைபெற்று வரும் அனல்பறக்கும் உச்சக்கட்ட பிரசாரம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

மாலையில் பிரசாரம் நிறைவுபெற்றதும், தொகுதிகளில் தங்கி இருக்கும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. 19-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

நாடாளுமன்றத்துக்கு 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக பீகார் (8), ஜார்கண்ட் (3), மத்தியபிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), உத்தரபிரதேசம் (13), இமாசலபிரதேசம் (4), சண்டீகார் (1) என மொத்தம் 59 தொகுதிகளுக்கும் 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்காளம் நீங்கலான 8 மாநிலங்களில் உள்ள 50 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து, ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதால், அங்கு 9 தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டசபை தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.


Next Story