சாலை தடுப்புச்சுவரில் மொபட் மோதி தொழிலாளி பலி
வேலூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் மொபட் மோதி தொழிலாளி பலியானார்.
வேலூர்,
வேலூரை அடுத்த பெருமுகை பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 48), தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி, அப்பகுதியில் உள்ள தனியார் ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். வேலை முடிந்து அவர் திரும்பும்போது கந்தசாமி அவரை மொபட்டில் அழைத்து வருவார்.
அதன்படி நேற்று மாலை மனைவி சுமதியை அழைத்து வர மொபட்டில் புறப்பட்டார். தொழிற்சாலை அருகே சென்றபோது சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மொபட் மோதியது. இதில், படுகாயம் அடைந்த கந்தசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு சென்று கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.