ஓட்டு எண்ணிக்கையின் போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும் : பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் பேச்சு


ஓட்டு எண்ணிக்கையின் போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும் : பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 17 May 2019 11:30 PM GMT (Updated: 17 May 2019 11:39 AM GMT)

ஓட்டு எண்ணிக்கையின் போது அவசரப்படாமல் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்று பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் ராமன் கேட்டுக்கொண்டார்.

வேலூர், 

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 19–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. வருகிற 23–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை நடைமுறைகள் குறித்து கடந்த 15–ந் தேதி சென்னையில் பயிற்சி வகுப்பு நடந்தது.

இதில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த பயிற்சியை தொடர்ந்து நேற்று அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட இருக்கும் பணியாளர்களுக்கான பயிற்சி கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் ஓட்டு எண்ணும் பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கலெக்டர் ராமன் கலந்துகொண்டு ஓட்டு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது:–

ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட இருக்கும் நீங்கள் காலை 6 மணிக்கே ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரவேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடிந்து, முடிவு அறிவிக்கப்படும் வரையில் வெளியே வரமுடியாது. எனவே மருந்து, மாத்திரைகளை கொண்டு வந்துவிடுங்கள். உங்களுடன் மைக்ரோ பார்வையாளர்களும் இருப்பார்கள்.

அவசரப்படாமல் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அவசரப்பட்டு முடிவை அறிவிக்கக்கூடாது. ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிந்ததும் உங்களுக்கு கொடுக்கப்படும் படிவத்தில் ஓட்டு விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story