ஓமலூர் அருகே குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காருவள்ளி ஊராட்சியில் மேல் காருவள்ளி, கீழ் காருவள்ளி ஆகிய பகுதிகளில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு காருவள்ளி பஸ்நிறுத்தம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதன்பேரில் அப்போது கலைந்து சென்றனர். அன்று மாலையே ஒரே பகுதியில் 10 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் கீழ் காருவள்ளி பகுதி மக்கள், முன்பு போலவே குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதன்பின்னர் நேற்று காலை மேல் காருவள்ளி பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் காருவள்ளி பஸ்நிறுத்தம் அருகில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தெருக்குழாய் மூலம் குடிநீர் வழங்கினால் குடிநீரை மோட்டார் மூலம் உறிஞ்சி விடுகிறார்கள். இதனால் மேல் காருவள்ளி பகுதிக்கு குடிநீர் வருவதில்லை. எனவே ஒரே இடத்தில் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடாக குடிநீர் உறிஞ்சுவதை துண்டிக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.
தகவல் அறிந்ததும் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் அங்கு வந்தார். அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் குடிநீருக்காக மேல் காருவள்ளி, கீழ் காருவள்ளி பொதுமக்கள் மாறி மாறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story