ஓசூர் அருகே பேரண்டபள்ளியில் கோதண்டராமர் சிலை 10 நாட்களாக நிறுத்தம் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்
ஓசூர் அருகே பேரண்டபள்ளியில் கோதண்டராமர் சிலை 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
ஓசூர்,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் நிறுவப்படுவதற்காக, பிரமாண்ட கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலையிலிருந்து ராட்சத லாரியில் கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு இடங்களில் லாரி டயர்கள் வெடிப்பு, லாரி செல்வதற்கான மண் சாலை, தற்காலிக பாலம் அமைத்தல் போன்ற பணிகளுக்காக, 3 மாத காலம் சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்தில் சிலையுடன் கூடிய லாரி நிறுத்தப்பட்டது.
இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த 3-ம் தேதி, கோதண்டராமர் சிலை, சாமல்பள்ளத்திலிருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் லாரி டயர்கள் மீண்டும் பஞ்சர் ஆகி, இம்மிடி நாயக்கனபள்ளி என்ற இடத்தில் லாரி நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட நிலையில், சின்னார் என்ற இடத்தில் பாதை சமமாக இல்லாத காரணத்தால் லாரி சக்கரம் மண்ணில் சிக்கி, மேற்கொண்டு நகர முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மண் சாலையை சமப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த 8-ந் தேதி சின்னாரிலிருந்து லாரி புறப்பட்டு, சூளகிரி, கோனேரிப்பள்ளி, காமன்தொட்டி வழியாக கோபசந்திரம் வந்தது. அங்கும் மண் பாதையில் லாரி சிக்கிக்கொண்டதால், மேற்கொண்டு நகர முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பாதை சரி செய்யப்பட்டு அன்று மாலை ஓசூர் அருகே பேரண்டபள்ளியை லாரி வந்தடைந்தது. அங்கும், டயர் பஞ்சர் மற்றும் துண்டான இணைப்பு சங்கிலி ஆகியவை சரிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் பேரண்டபள்ளியிலிருந்து ஓசூர் நோக்கி செல்லும்போது, வழியில் தென்பெண்ணை ஆற்றை லாரி கடந்து செல்வதற்கு வசதியாக மேம்பாலத்தையொட்டி, மண் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சமீப நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக மண்ணில் ஈரப்பதம் இருந்ததால் லாரியை இயக்க முடியவில்லை. மேலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், தொடர் மழை காரணமாகவும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண் சாலை அடித்து செல்லப்பட்டது.
பெங்களூரு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணை நீரை தொடர்ந்து திறந்து விட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாலும், ஓசூர் பகுதியில் நாள்தோறும் மழை பெய்து வருவதாலும் தென்பெண்ணை ஆற்றின் அருகே மண் பாலம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாற்று ஏற்பாடாக, தரைப்பாலம் அமைத்து அதன் வழியாக சிலையுடன் கூடிய லாரி, கடந்து செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆற்றில் குழாய்கள் அமைத்து அதன்மீது மண்ணை கொட்டி, மண் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணிகள் இன்னும் தொடங்காததால், கடந்த 10 நாட்களாக கோதண்டராமர் சிலை, பேரண்டபள்ளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சிலையை தினமும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக திரண்டு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story