“அழிந்து போன உடன்குடி வெற்றிலை” வீடுகளில் ஞாபகத்திற்காக வளர்க்கப்படுகிறது
உடன்குடி பகுதியில் வெற்றிலை விவசாயம் முழுமையாக அழிந்து போனது. ஆனாலும் சிலர் வீடுகளில் வெற்றிலையை ஞாபகத்திற்காக வளர்க்கின்றனர்.
உடன்குடி,
உடன்குடி நகர பகுதிகளில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு திரும்பிய திசைகளில் எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக வெற்றிலை தோட்டம் தான் தெரியும். உடன்குடியில் இருந்து தினசரி 1,500 கட்டு வெற்றிலைகள் (ஒரு கட்டு ஒரு கிலோ) வெளியூர்களுக்கு விற்பனை செய்யப்படும். “உடன்குடி வெற்றிலை” என்று ஊர் பெயரோடு ஊர் ஊராய் பவனி வந்தது. இந்த வெற்றிலையை சுவைப்பதற்கு பல ஆயிரம் பேர் இருந்தனர்.
ஆனால் படிப்படியாக இப்பகுதி விவசாயிகள் வெற்றிலையை மறந்து மாற்று விவசாயத்தில் கவனம் செலுத்த தொடங்கினர். தண்ணீர் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால் வெற்றிலை விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வாழை போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் வெற்றிலை விவசாயம் அடியோடு கைவிடப்பட்டு உள்ளது.
இன்று உடன்குடிக்கு தேவையான வெற்றிலை வெளியூரில் இருந்துதான் வருகிறது. உடன்குடியில் மருந்துக்கு கூட வெற்றிலை உற்பத்தி இல்லை. பரமன்குறிச்சி, மாநாடு, வெள்ளாளன்விளை, சீர்காட்சி மற்றும் ஆத்தூர் பகுதியில் இருந்துதான் உடன்குடிக்கு வெற்றிலை விற்பனைக்கு வருகிறது.
வருங்கால சந்ததிகள் உடன்குடி வெற்றிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உடன்குடி நகர பகுதியில் உள்ளவர்களில் சிலர் தங்களது வீடுகளில் வெற்றிலையை வளர்த்து வருகின்றனர்.
விவசாய நிலங்களில் கடல்நீர் புகுந்தது. நல்ல குடிநீர் கிணறுகள் எல்லாம் கடல் நீரால் உப்பாய் மாறி போனது. இதனால் வெற்றிலை உற்பத்தி செய்ய முடியாமல் உடன்குடி நகர பகுதி விவசாயிகள் கடும் அவதிப்பட்டனர். வேறுவழியின்றி வெற்றிலை உற்பத்தியும் இப்பகுதியில் முழுமையாக அழிந்துள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story