போலீஸ் ஏட்டு, மனைவி மீது தாக்குதல், கூடலூர் வாலிபர்கள் 4 பேர் கைது
போலீஸ் ஏட்டு, அவரது மனைவியை தாக்கியதாக கூடலூரை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 43). இவர் அம்பலமூலா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் எருமாட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் கலந்து கொண்டார்.
அப்போது ஒரு கும்பல் தினேஷ்குமாரின் சகோதரரின் குழந்தைகளை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை ஏட்டு தினேஷ்குமார் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தினேஷ்குமாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதைகண்ட அவரது மனைவி அஸ்வினி ஓடி வந்து தடுத்தார். அப்போது அந்த கும்பல் அஸ்வினியையும் தாக்கியது. இதுகுறித்து எருமாடு போலீஸ் நிலையத்தில் ஏட்டு தினேஷ்குமார் புகார் அளித்தார்.
இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமலைச்சாமி உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து கூடலூர் புத்தூர்வயலை சேர்ந்த நவநீத் (வயது 27), மண்வயல் விஷ்ணு (25), சோமேஸ் (24), மிதூன் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story