8 வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்


8 வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்
x
தினத்தந்தி 18 May 2019 4:45 AM IST (Updated: 18 May 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

8 வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று பயிற்சி முகாமில் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.அய்யம்பட்டி, நத்தமேடு, ஜாலிப்புதூர் ஆகிய இடங்களில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த 8 வாக்குச்சாவடிகளில் 3,060 ஆண் வாக்காளர்களும் 2,952 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 6,012 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் 8 வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்க வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மலர்விழி தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், இடைத்தேர்தல் நடைபெற்ற பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் கீதாராணி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் 8 வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். முறைகேடுகளை தடுக்க நுண்பார்வையாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் மறு ஓட்டுப்பதிவை அமைதியான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்று இந்த பயிற்சி முகாமில் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார். மறு ஓட்டுப்பதிவு பணிகள் தொடர்பாக பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

இதில் தாசில்தார்கள் தமிழரசன், சரவணன், ராதாகிருஷ்ணன், அன்பு, கேசவமூர்த்தி, ராஜசேகரன் மற்றும் துணை தாசில்தார்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story