தேன்கனிக்கோட்டை அருகே தயாரிக்கப்பட்ட கள்ளத்துப்பாக்கிகள் நக்சலைட்டுகளுக்கு விற்பனை? போலீசார் தீவிர விசாரணை
தேன்கனிக்கோட்டை அருகே தயார் செய்யப்பட்ட கள்ளத்துப்பாக்கிகள் நக்சலைட்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணிபண்டா கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 50) என்பவருடைய வீட்டில் கள்ளத்துப்பாக்கிகள் தயார் செய்வதாக தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் மற்றும் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லட்சுமணன் வீட்டில் 100-க்கும் மேற்பட்ட கள்ளத்துப்பாக்கிகள் செய்வதற்கான உதிரி பாகங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லட்சுமணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சுமணன் கள்ளத்துப்பாக்கிகளை தயார் செய்து அதனை கர்நாடக, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த ரவுடிகளுக்கும், வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கும் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் நக்சலைட்டுகளுக்கு கள்ளத்துப்பாக்கிகளை விற்பனை செய்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் கள்ளத்துப்பாக்கிகளை தயார் செய்த வழக்கில் லட்சுமணன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story