மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது


மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது
x
தினத்தந்தி 18 May 2019 3:45 AM IST (Updated: 18 May 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளது. அதை கலெக்டர் சந்தீப்நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி, 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள போலீசார், ஊர்க்காவல் படையிருடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தேர்தல் பார்வையாளர் சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோர் தலைமை தாங்கி பணி குறித்து விளக்கி கூறினர்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:- தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி போலீசார் பணியை மேற்கொள்ள வேண்டும். வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அவர்களிடம் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வதற்காக 20 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த குழுவினருக்கான 20 வாகனங்களிலும் தனித்தனியாக ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாகவும், உரிய நேரத்துக்கு கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும். மீண்டும் வாக்குப்பதிவு முடிந்த உடன் பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மாரியப்பன், இன்ஸ்பெக்டர் மகேஷ்பத்மநாபன், தேர்தல் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் அருள் ரோஸ் சிங், ஓட்டப்பிடாரம் தேர்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மாவதி, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர்மன்னன், மோட்டார் வாகன ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story