மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியல்


மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 17 May 2019 10:00 PM GMT (Updated: 17 May 2019 7:55 PM GMT)

மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ளது அயநல்லூர் கிராமம். இந்த கிராமத்திற்கு கடந்த 10 நாட்களாக முறையாக மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுபாடும், முறையாக விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மோட்டார் இணைப்புக்கு உரிய மின் தடையால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த கிராமத்திற்கு மின்வினியோகம் வழங்கி வரும் பொன்னேரி மின்துறை அதிகாரிகளை கண்டித்து நேற்று அயநல்லூர் கிராமத்தில் அந்த வழியாக பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜீ, கும்மிடிப்பூண்டி மின்துறை உதவி செயற்பொறியாளர் பன்னீர் செல்வம், பொன்னேரி உதவி பொறியாளர் கோகுல் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். அவர்களின் போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது.

Next Story