செயல் அலுவலருக்கு அரிவாள் வெட்டு: கோவில் ஊழியர்கள் உள்பட 6 பேர் கைது


செயல் அலுவலருக்கு அரிவாள் வெட்டு: கோவில் ஊழியர்கள் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 18 May 2019 4:00 AM IST (Updated: 18 May 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே கோவில் செயல் அலுவலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கோவிலின் 4 ஊழியர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பம் முருகன் கோவில் செயல் அலுவலராக விழுப்புரத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 27) என்பவர் உள்ளார். இவர் ஞாயிறு கிராமத்தில் புஸ்பதீஸ்வரர் கோவில், செங்கரை கிராமத்திலுள்ள காட்டுசெல்லியம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் கூடுதலாக செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 12-ந்தேதி பொன்னேரி அருகே மீஞ்சூர்-நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற சீனிவாசனை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவர் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுதொடர்பாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதுதொடர்பாக ஆண்டார்குப்பம் கோவில் எழுத்தர் வெங்கடேசன்(28) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

கோவிலின் செயல் அலுவலராக சீனிவாசன் பொறுப்பு ஏற்ற பிறகு காட்டுசெல்லியம்மன் கோவில், ஞாயிறு புஸ்பதிஸ்வரர் கோவில், அருமந்தை கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியர் கோவில்களில் வரவு ரசீது, செலவினங்களின் ரசீதுகள் உள்ளிட்ட அந்த கோவில்களின் பல்வேறு ரசீது, ஆவணங்களை ஆய்வு செய்தபோது போலி பில்கள் ரசீதுகள் மூலம் பல லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது அவருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து ஞாயிறு புஸ்பதீஸ்வரர் கோவிலின் வசூல் எழுத்தர் தனஞ்செழியன்(27), செங்கரை காட்டுசெல்லியம்மன் கோவில் அர்ச்சனை டிக்கெட் விற்பனையாளர் தனசேகர்(24), ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியர் கோவில் எழுத்தர்கள் வெங்கடேசன்(28), தினேஷ்(27) ஆகியோர் முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சீனிவாசன் முயன்றது அவர்களுக்கு தெரியவந்தது.

இதனை அறிந்த மேற்கண்ட 4 பேரும் சீனிவாசனை மிரட்டி கொலை செய்ய முயன்றால் அவர் பயந்துபோய் வேறு கோவில்களுக்கு மாற்றம் செய்து கொண்டு செல்வார் என நினைத்துள்ளனர். பின்னர் அவர்கள் 4 பேரும் கடந்த 12-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற சீனிவாசனை வெட்டிக்கொலை செய்ய முயன்றுள்ளனர். இவர்களுக்கு உடந்தையாக சதீஷ்(26), கிருபாகரன்(20) ஆகியோர் இருந்துள்ளனர்.

பின்னர் சோழவரம் போலீசார் தனஞ்செழியன், தனசேகர், வெங்கடேசன், தினேஷ், சதீஷ், கிருபாகரன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். கோவில் ஊழியர்களே முறைகேட்டில் ஈடுபட்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story