நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆலோசனை கூட்டம்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 17 May 2019 9:45 PM GMT (Updated: 17 May 2019 8:05 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

நெல்லை, 

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆயத்தப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் 10 லட்சத்து 31 ஆயிரத்து 547 வாக்குகளும், தென்காசி தொகுதியில் 10 லட்சத்து 56 ஆயிரத்து 841 வாக்குகளும் பதிவாகி உள்ளன. நெல்லை தொகுதிக்கு உட்பட்ட வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியிலும், தென்காசி தொகுதிக்கு உட்பட்ட வாக்குகள் குற்றாலம் பராசக்தி கல்லூரியிலும் வருகிற 23-ந்தேதி எண்ணப்பட உள்ளது.

இந்த பணிகளில் வாக்கு எண்ணும் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் 202 பேரும், நுண்பார்வையாளர்கள் 108 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் தயார் நிலையில் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை முகவர்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் தெளிவாக அறிந்து பணிபுரிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story