நெல்லை அரசு அருங்காட்சியகம், அறிவியல் மையத்தில் சிறப்பு கண்காட்சி
நெல்லை அரசு அருங்காட்சியம், அறிவியல் மையத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு கண்காட்சி நடக்கிறது.
நெல்லை,
சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, நெல்லை பாளையங்கோட்டையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ‘மகாத்மா காந்தி ஒரு சகாப்தம்’ என்ற தலைப்பில் காந்தியடிகளின் 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், தபால்தலைகள், காந்தியின் உருவம் பொறித்த நாணயங்களின் புகைப்படங்கள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மேலும் 25 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய தபால்தலைகளும், தபால் உறைகளின் கண்காட்சியும், மாணவர்களின் ஓவிய கண்காட்சியும் நடைபெறுகிறது.
இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைக்கிறார். நாளை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில், இந்தியா சிமெண்டு நிறுவன இணை தலைவர் சண்முகம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறார். இந்த தகவலை நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் இன்றும், நாளையும் பழங்கால பொருட்கள் மூலமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பாரம்பரியமிக்க பழமைவாய்ந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், கெடிகாரங்கள், கேமராக்கள், ரேடியோக்கள், டி.வி.க்கள், சினிமா கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன என்று அறிவியல் மைய அலுவலர் முத்துகுமார் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story