அந்தியூர் அருகே தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து சிறுவன் சாவு


அந்தியூர் அருகே தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து சிறுவன் சாவு
x
தினத்தந்தி 17 May 2019 10:30 PM GMT (Updated: 17 May 2019 8:27 PM GMT)

அந்தியூர் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கோவில்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பொம்மையன் (வயது 40). விவசாயி. இவருடைய மனைவி ராஜ் (30). இவர்களுடைய மகள் ஹேமாவதி (9), மகன் நாகேந்திரன் (6). இதில் ஹேமாவதி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பள்ளியில் நாகேந்திரன் 2-ம் வகுப்பு படித்து வந்தான். பொம்மையன் தனது விவசாய தேவைக்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 7 அடி உயரத்தில் ஒரு தொட்டி கட்டி வைத்து உள்ளார்.

இந்த நிலையில் ஹேமாவதி, நாகேந்திரன் உள்பட 7 சிறுவர், சிறுமிகள் நேற்று மாலை அந்த தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்தனர்.

பொம்மையன் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் புதிதாக கட்டிய தொட்டிக்கு தண்ணீர் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த தொட்டி இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். ஹேமாவதி படுகாயம் அடைந்தாள். மற்ற சிறுவர், சிறுமிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

இதை பார்த்ததும் பொம்மையன், ராஜ் மற்றும் உறவினர்கள் பதற்றத்துடன் ஓடிவந்தனர். அங்கு பிணமாக கிடந்த நாகேந்திரனை கண்டு கதறி அழுதனர். மேலும் படுகாயம் அடைந்த ஹேமாவதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Related Tags :
Next Story