திருப்பூரில் இடியுடன் கூடிய பலத்த மழை; மரங்கள் முறிந்து விழுந்தது


திருப்பூரில் இடியுடன் கூடிய பலத்த மழை; மரங்கள் முறிந்து விழுந்தது
x
தினத்தந்தி 17 May 2019 10:30 PM GMT (Updated: 17 May 2019 9:00 PM GMT)

திருப்பூரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.பொங்கலூரில் தென்னை மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன.

திருப்பூர்,

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வழக்கம் போல நேற்று காலையில் இருந்தே வெயில் அதிகமாக இருந்தது.

ஆனால் மாலையில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்திலேயே இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கொண்டு ஆங்காங்கே நின்றனர். இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அவ்வப்போது காற்றும் வீசியதால் ஒருசில இடங்களில் மரங்கள் கீழே முறிந்து விழுந்தன.

கொங்கு மெயின்ரோடு இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில், ராயபுரம், குமரன் ரோடு, பார்க் ரோடு உள்ளிட்ட சாலையோரங்களில் உள்ள மரங்களின் கிளைகளும் ஒடிந்து ரோட்டில் விழுந்தன. இதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அப்புறப்படுத்தினார்கள். இதனால் வாலிபாளையம், ராயபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் பல மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கோர்ட்டு ரோட்டில் இருந்து கொங்குமெயின்ரோட்டை இணைக்கும் கீழ்மட்ட பாலம் மற்றும் ஒற்றைக்கண் பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் அதிக அளவு தேங்கி நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர். காலை முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் மாலையில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுபோல பல்லடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது.

பொங்கலூர் சுற்றுவட்டார பகுதியான தேவணம்பாளையம், ராமம்பாளையம், உகாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் இருந்த தென்னை மரங்கள், வேப்ப மரங்கள் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் தேவணம்பாளையத்தில் உள்ள அரிசன காலனியில் சந்திரா(45) என்பவர் தனது பேரக்குழந்தையான தினேஷ் (2) வைத்துக்கொண்டு வீட்டில் இருந்தார்.

அப்போது பலத்த காற்றுவீசியதால் அவர்களது வீட்டின் அருகில் வீட்டில் இருந்து சிமெண்ட் ஷீட் பறந்து வந்து சந்திராவின் வீட்டின் மேல் விழுந்தது. இதில் சந்திரா வீட்டின் ஓடி நொறுங்கியது. இதனால் நொறுங்கிய ஓடுகள் வீட்டின் உள்பகுதியில் நின்று கொண்டிருந்த சந்திரா மற்றும் அவரது பேரன் தினேஷ் ஆகியோர் மீது விழுந்தது. இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக பொங்கலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Next Story