திருப்பூரில் 2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு பெண் தற்கொலை முயற்சி; 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


திருப்பூரில் 2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு பெண் தற்கொலை முயற்சி; 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 17 May 2019 10:45 PM GMT (Updated: 17 May 2019 9:00 PM GMT)

திருப்பூரில் 2 குழந்தைகளை தூக்கில் தொங்க விட்டு பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 3 பேருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அவினாசி ரோடு குமார்நகரை அடுத்த சாமுண்டிபுரம் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி பிரதீபா (வயது 35). இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று காலை அருண்குமார் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் திடீரென அவருடைய வீட்டில் 10 வயது மகன் கூச்சல் போடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அங்கு பார்த்த போது வீட்டில் பிரதீபா துப்பட்டாவை கழுத்தில் மாட்டி கொண்டு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

மேலும் அவருடைய மகன் மற்றும் மகளும் மயக்க நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில் அருண்குமாரின் மகனும், மகளும் சகஜ நிலைக்கு திரும்பினார்கள். ஆனால் பிரதீபா மட்டும் மேல்சிகிச்சைக்காக குமார்நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகலவறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதில் பிரதீபா வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவருடன் வேலை செய்யும் ஒருவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அவருடைய கணவர் அருண்குமாருக்கு தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை அருண்குமார் வேலைக்கு சென்ற உடன் பிரதீபா 2 குழந்தைகளிடமும் அப்பா வந்து மீண்டும் திட்டுவார். எனவே நாம் 3 பேரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

ஆனால் அதற்கு குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வதற்கு பதிலாக வேறு எங்காவது சென்று விடலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் பிரதீபா அதை மறுத்து முதலில் 2 குழந்தைகளையும் வீட்டில் இருந்த கம்பியில் தனித்தனி துப்பட்டாவில் தொங்க விட்டுள்ளார். பின்னர் அவரும் மற்றொரு துப்பட்டாவில் தூக்குப்போட்டுள்ளார். ஆனால் துப்பட்டா அறுந்து விழுந்ததால் 2 குழந்தைகளும் கீழே விழுந்தனர்.

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அருண்குமாரின் மகன் கூச்சல் போட்டதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் 2 குழந்தைகளை தூக்கில் தொங்க விட்டு பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story