மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா சிங் வாரந்தோறும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு


மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா சிங் வாரந்தோறும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 17 May 2019 10:30 PM GMT (Updated: 17 May 2019 9:58 PM GMT)

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜனதா வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் வாரந்தோறும் ஆஜராக வேண்டும் என சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகாவ் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஒரு மசூதி அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய், பெசிதேஷ் புரோகித், அஜய் ரஹிர்கர், சுதாகர் திவிவேதி, சுதாகர் சதுர்வேதி, சமீர் குல்கர்னி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த நிலையில் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர் போபால் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

இதற்கிடையே பிரக்யா சிங் தாக்குர் உள்பட 7 பேரும் வழக்கு விசாரணைக்காக மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் முறையாக ஆஜராகவில்லை என தெரிகிறது.

இதனால், அதிருப்தி அடைந்த சிறப்பு கோர்ட்டு நீதிபதி வினோத் பாதல்கர், குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 7 பேரும் வாரம் ஒருமுறை கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது அதிரடி உத்தரவை பிறப்பித்தார். மேலும் முறையான காரணங்கள் இன்றி அவர்கள் நேரில் ஆஜராகுவதில் இருந்து எக்காரணம் கொண்டும் விலக்கு அளிக்க முடியாது என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story