அரங்குளலிங்கம்-பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்


அரங்குளலிங்கம்-பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 17 May 2019 10:26 PM GMT (Updated: 17 May 2019 10:26 PM GMT)

திருவரங்குளம் அரங்குளலிங்கம்-பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவரங்குளம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் அரங்குளலிங்கம்-பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் வெள்ளி, அன்னம், காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் காலை, மாலை வேளைகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அரங்குளநாதர்-பெரிய நாயகி அம்மனை ஒரு தேரிலும், மற்றொரு தேரில் அம்மனை எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் வழக்கப்படி கோவில் சிப்பந்திகள், கோவில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள், மண்டகப்படிதாரர்கள், ஊர் முக்கியஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கோவில்பட்டி தேர்வடம் தொடும் வகையறாவினர் வெள்ளைக்குடை பிடித்து மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர், வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள் 2 தேர்களையும் வடம் பிடித்து இழுத்தனர். தேர்களின் முன்பு சிவ பக்தர்கள் சிவபுராணம் பாடியவாறு ஊர்வலமாக வந்தனர்.

இதில் கோவில் மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி தேவஸ்தான திருப்பணி கமிட்டி தலைவர் புஷ்பராஜ், கவுரவத் தலைவர் ராமச்சந்திரன், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல, ஆவுடையார்கோவில் அருகே உள்ள திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் பூத, கேடகம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி முதல் தேரில் பஞ்ச மூர்த்தி சுவாமியையும், மற்றொரு தேரில் அம்மனும் எழுந்தருள செய்தனர். அதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

இதில் திருப்புனவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(சனிக்கிழமை) ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி வீதி உலாவும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) தெப்ப திருவிழாவும் நடக்கின்றன.

Next Story