தரிசனத்துக்கு கணவருடன் வரிசையில் நின்ற போது பரிதாபம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெண் திடீர் சாவு, நடை அடைப்பு; திருமணங்கள் நிறுத்தம்


தரிசனத்துக்கு கணவருடன் வரிசையில் நின்ற போது பரிதாபம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெண் திடீர் சாவு, நடை அடைப்பு; திருமணங்கள் நிறுத்தம்
x
தினத்தந்தி 18 May 2019 4:00 AM IST (Updated: 18 May 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்துக்கு வரிசையில் நின்ற பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனடியாக கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை நடத்தப்பட்டதால், கோவிலில் நடக்க இருந்த திருமணங்கள் நிறுத்தப்பட்டன.

மதுரை,

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். அவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 60). இவர்கள் நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இலவச தரிசன வரிசையில் அவர்கள் இருவரும் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் வரிசையாக வந்து அம்மன் சன்னதி கொடிமரம் அருகே சென்றனர். அப்போது திடீரென்று மகேஸ்வரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் அங்கு விரைந்து வந்து மயங்கி கிடந்த மகேஸ்வரியை கோவிலுக்கு வெளியே கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் கோவிலுக்குள் ஸ்டிரெச்சர் போன்ற எந்த உபகரணமும் இல்லை. எனவே அவரை வீல் சேரில் ஏற்றிக் கொண்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர்.

அவர்கள் மகேஸ்வரியை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இந்த பரிதாப சம்பவத்தை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நாங்கள் இறந்தவரின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிச் செல்ல மாட்டோம் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார், ஷேர் ஆட்டோவை வரவழைத்து மகேஸ்வரியின் உடலை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கோவிலுக்குள் பெண் மரணம் அடைந்ததை தொடர்ந்து அம்மன், சாமி சன்னதி நடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. மேலும் ஆகம விதிப்படி பரிகார பூஜைகள் செய்து தான் கோவிலை திறப்போம் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

நேற்று திருமண முகூர்த்த நாள் என்பதால் கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்து, புதுமணத் தம்பதியினரை உறவினர்கள் அழைத்து வந்திருந்தனர். ஆனால், கோவில் கதவு சாத்தப்பட்டு, திருமணங்கள் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்து, ஆடி வீதியில் உள்ள வன்னிமரத்தடி விநாயகர் கோவிலில் திருமணத்தை நடத்திக் கொள்ளுமாறு அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் விநாயகர் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். மேலும் வெளியூர் பக்தர்கள் சாமி கும்பிட முடியாமல் கோவிலுக்கு வெளியே காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் கழித்து பரிகார பூஜை முடிந்து கோவில் கதவு திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்களும், புதுமண தம்பதியினரும் கோவிலுக்கு சென்று வழக்கம் போல் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story