வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை சேமிக்கும் ‘ஹார்டு டிஸ்க்’ மாற்றம்


வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை சேமிக்கும் ‘ஹார்டு டிஸ்க்’ மாற்றம்
x
தினத்தந்தி 17 May 2019 10:45 PM GMT (Updated: 17 May 2019 10:50 PM GMT)

தேனி வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை சேமிக்கும் ‘ஹார்டு டிஸ்க்’ சாதனம் மாற்றப்பட்டது. இதை பார்வையிட சென்ற மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தேனி,

தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தல், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் மையம் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கடந்த மாதம் 18-ந்தேதி நடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துணை ராணுவம், பட்டாலியன், ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த காட்சிகள் அனைத்தும் ‘ஹார்டு டிஸ்க்’ எனப்படும் சாதனத்தில் சேமிக்கப்பட்டு வருகிறது. இந்த ஹார்டு டிஸ்க்கில் சேமித்து வைக்கும் திறன் தீர்ந்தவுடன், மாற்று ஹார்டு டிஸ்க் பயன்படுத்தப்படும்.

அந்த வகையில் நேற்று ஹார்டு டிஸ்க் திறன் தீர்ந்தது. தொடர்ந்து அதில் காட்சிகளை சேமித்து வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதுகுறித்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலர்கள் தகவல் கொடுத்தனர். அதன்படி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் சிலர் வாக்கு எண்ணும் மையத்துக்கு நேற்று பிற்பகலில் வந்தனர். அவர்கள் முன்னிலையில், ஏற்கனவே பொருத்தப்பட்டு இருந்த ஹார்டு டிஸ்க் அகற்றப்பட்டு, புதிய ஹார்டு டிஸ்க் பொருத்தப்பட்டது.

இதற்கிடையே இந்த பணியை பார்வையிடுவதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தார். அவர் தனது வாகனத்தில் உள்ளே செல்ல முயன்றதாகவும், அதை போலீசார் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், போலீசாருக்கும், அவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அவர், போலீசார் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி வாக்குவாதம் செய்தார். பின்னர், அங்கு வந்த தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், வேட்பாளர் ராதாகிருஷ்ணனை சமரசம் செய்தார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story