தேனியில், மறுஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தும் எந்திரங்களில் சோதனை வாக்குப்பதிவு
தேனியில் மறுஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சோதனை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
தேனி,
தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பாலசமுத்திரத்தில் உள்ள வாக்குச்சாவடி எண்-67, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண்-197 ஆகிய 2 வாக்குச்சாவடிகளிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் ‘விவிபேட்’ எந்திரங்கள் தேனி தாலுகா அலுவலகத்துக்கு கோவை, திருவள்ளூர் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டன. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்த குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அந்த வகையில், 2 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 7 வாக்குப்பதிவு எந்திரம், 4 கட்டுப்பாட்டு கருவிகள், 4 ‘விவிபேட்’ எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. எந்திரங்கள் பழுது ஏற்பட்டால் மாற்று எந்திரங்கள் வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் தலா 2 மடங்கும், விவிபேட் எந்திரங்கள் 3 மடங்கும் கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி மொத்தம் 21 வாக்குப்பதிவு எந்திரங்கள், 12 கட்டுப்பாட்டு கருவிகள், 16 விவிபேட் எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இந்த பணியை தொடர்ந்து எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிய சோதனை வாக்குப்பதிவு நேற்று நடத்தப்பட்டது.
இதற்காக வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் தேனி தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் சோதனை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மொத்தம் 8 வாக்குப்பதிவு எந்திரங்களில் சோதனை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
ஒவ்வொரு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் ஆயிரம் வாக்குகள் வீதம் பதிவு செய்யப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. சோதனை வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து அதில் பதிவான வாக்குகள் விவரம் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டது. பின்னர், விவிபேட் எந்திரத்தில் இருந்த ஒப்புகை சீட்டுகளும் அகற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து வடுகப்பட்டி வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கும், பாலசமுத்திரம் வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்துக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அவை அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட உள்ளன.
Related Tags :
Next Story