கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 May 2019 11:03 PM GMT (Updated: 17 May 2019 11:03 PM GMT)

கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளரிடம் ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

நொய்யல்,

கரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் பி.எஸ்.என்.தங்கவேல். இவர், அக்கட்சியின் சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்டார். இந்தநிலையில் தங்கவேல் நேற்று கரூரில் இருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலையொட்டி நொய்யல் சோதனைசாவடி அருகே வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் ஆனந்த் தலைமையில் பறக்கும்படையினர், போலீசார், துணை ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தங்கவேலுவின் காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் காரில் ரூ.2 லட்சம் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து ரூ.2 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரி சார்பில் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் மாவட்ட செயலாளர் பி.எஸ்.என். தங்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பணம் சொந்த உபயோகத்துக்காக கொண்டு செல்லப்பட்டதா, அல்லது வேறு எதற்காகவும் கொண்டு செல்லப்பட்டதா என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தங்கவேலுவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சம் அரவக்குறிச்சி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அமுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story