சூலூர் தொகுதியில் பிரசாரம், வளர்ச்சி திட்ட பணிகள் தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
வளர்ச்சி திட்ட பணிகள் தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சூலூரில் பிரசாரம் செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
கருமத்தம்பட்டி,
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வி.பி.கந்தசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நடிகர் குண்டு கல்யாணம் உள்ளிட்டோர் நேற்று சூலூரில் இறுதி கட்ட பிரசாரம் செய்தனர். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
சூலூர் பகுதியில் உள்ள கோவை-திருச்சி சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த னர். அதை ஏற்று தற்போது இங்கு சாலையை விரிவுபடுத்தி, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆதரவுடன், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது தான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதை தி.மு.க. தடுத்து நிறுத்தவில்லை.
சாதிக்பாட்ஷா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது மனைவி புகார் அளித்து உள்ளார். தி.மு.க.வை பற்றி பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். எனவே அவர்கள் மு.க.ஸ்டாலின் பேச்சை நம்ப மாட்டார்கள்.
சூலூருக்கு 3-வது குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. கோவை அரசு ஆஸ்பத்திரி தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு அறுவை சிகிச்சைகளும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் சில பாலங்கள் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது.
தி.மு.க. ஆட்சி காலத்தில் கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலங்களை கையகப் படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போதைய அரசு பொதுமக்களின் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்குகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை நாங்கள் கொடுத்து இருக்கிறோம். ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே விடுபட்ட வளர்ச்சி பணிகள் தொடர முடியும். எனவே வளர்ச்சி திட்ட பணிகள் தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.
சூலூர் அரசு ஆஸ்பத்திரியை தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அது நிறைவேற்றப்படும். மேலும் இங்குள்ள குளங்கள் தூர்வாரப்படும். ஆனைமலையாறு- நல்லாறு திட்டமும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். விசைத்தறியாளர்களின் ரூ.65 கோடி கடன் தள்ளுபடியும் செய்யப்படும். எனவே வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சூலூர் தொகுதி பொறுப்பாளர் தோப்பு அசோகன், ஒன்றிய செயலாளர் மாதப்பூர் பாலு, சூலூர் லிங்குசாமி, நகர செயலாளர் கார்த்திகை வேலன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பனப்பட்டி தினகரன், ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story