மில்லி கிராம் வயலின்


மில்லி கிராம் வயலின்
x
தினத்தந்தி 19 May 2019 3:30 AM GMT (Updated: 18 May 2019 2:21 PM GMT)

ஒரு மில்லி கிராமுக்கும் குறைவாக எடை கொண்ட வயலினை தங்கத்தில் உருவாக்கி அசத்தி இருக்கிறார், அஜய்குமார். இந்த வயலின் 0.74 மில்லி கிராம் எடையும், 2 செ.மீ நீளமும் கொண்டிருக்கிறது.

வெறும் காட்சி பொருளாக மட்டுமே இந்த வயலின் இல்லாமல் அதில் இசையையும் எழுப்ப முடியும் என்பது சிறப்பம்சம். 45 வயதாகும் அஜய் குமார் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மினியேச்சர் சிற்பங்கள் செதுக்கி வருகிறார். தங்கத்தில் இந்த வயலினை உருவாக்குவதற்கு 11 மணி நேரம் செலவிட்டிருக்கிறார். 

மூன்று மணி நேரத்தில் சிறிய கத்திரிக்கோலையும் வடிவமைத்திருக்கிறார். அது 0.18 மில்லி கிராம் எடை கொண்டது. அதனை பயன்படுத்தியும் பேப்பரை கத்தரிக்கலாம். 1000 மில்லி கிராம் சேர்ந்ததுதான் ஒரு கிராம் என்ற நிலையில் மில்லி கிராமுக்கும் குறைவாக இருக்கும் மைக்ரோ மில்லி கிராம் அளவில் அஜய்குமார் வயலின் உருவாக்கி இருப்பது பலருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறது.

அஜய்குமார் உருவாக்கிய வயலினும், கத்தரிக்கோலும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதுபோல் ஏராளமான மினியேச்சர் சிற்பங்களை உருவாக்கியும் லிம்கா புத்தகத்தில் இடம் பிடித் திருக்கிறார்.

‘‘மைக்ரோ அளவில் சிற்பங்களை உருவாக்குவதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். கண்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இரண்டு மணி நேரம் வரையே தொடர்ந்து வேலை செய்ய முடியும். அப்போதும் மூச்சுக்காற்றை மிக கவனமாக வெளியேற்றியபடிதான் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் நுட்பமான படைப்புகளை உருவாக்கும்போது மூச்சுக்காற்று கூட சேதத்தை ஏற்படுத்தி விடும்’’ என்கிறார். 2004-ம் ஆண்டு முதன் முதலாக அஜய்குமார் லிம்கா சாதனையில் இடம்பிடித்திருக்கிறார்.

‘‘நான் முதன் முதலாக 1.5 கிராமில் பூட்டு உருவாக்கினேன். மிகச்சிறிய வடிவில் மின் விசிறியையும் தயாரித்தேன். அவை லிம்கா சாதனையில் என் பெயரை இடம்பெற செய்து மேலும் பல படைப்புகளை உருவாக்கும் ஆர்வத்தை தூண்டியது’’ என்கிறார்.

Next Story