கன்னியாகுமரி கடலில் தத்தளித்த வாலிபர் ரோந்து படகில் சென்று போலீசார் மீட்டனர்


கன்னியாகுமரி கடலில் தத்தளித்த வாலிபர் ரோந்து படகில் சென்று போலீசார் மீட்டனர்
x
தினத்தந்தி 18 May 2019 11:00 PM GMT (Updated: 18 May 2019 2:37 PM GMT)

கன்னியாகுமரி கடலில் தத்தளித்த வாலிபரை போலீசார் ரோந்து படகில் சென்று மீட்டனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுடலைமணி மற்றும் போலீசார் நேற்று காலையில் கடலில் ரோந்து படகில் சென்று கண்காணித்தனர். அப்போது விவேகானந்தர் மண்டபத்தின் பின்புறம் உள்ள கடலில் வாலிபர் ஒருவர் தத்தளித்தார். விவேகானந்தர் மண்டப காவலாளி ஒருவர், இதனை கவனித்து அவரை காப்பாற்றும் படி சத்தம் போட்டார்.

மேலும் அவர் அந்த வழியாக ரோந்து படகில் சென்ற கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சைகை காண்பித்து மண்டப பகுதிக்கு வரும்படி அழைத்தார். உடனே போலீசார் விரைந்து சென்று கடலில் தத்தளித்த வாலிபரை மீட்டு பத்திரமாக கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த முகைதீன் (வயது 34) என்பதும், விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி பார்த்த போது வேகமாக காற்று அடித்ததாகவும், இதனால் அவர் கடலுக்குள் தவறி விழுந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் முகைதீனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். கடலில் தத்தளித்த வாலிபர் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story