வந்தவாசி அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.79 ஆயிரம் கொள்ளை 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
வந்தவாசி அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.79 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா மடம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மேற்பார்வையாளராக கோழிப்புலியூரை சேர்ந்த பழனி (வயது 40) என்பவரும், விற்பனையாளர்களாக மேலத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (40), கடம்பை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (35) ஆகியோரும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு மது விற்பனை செய்த 79 ஆயிரத்து 220 ரூபாயை பழனி தனது மொபட்டில் வைத்து கொண்டு 3 பேரும் தனித்தனியே தங்களுடைய வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.
வந்தவாசி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலை இணைப்பு சாலை பகுதியான காந்தி கிராமம் அருகே 3 பேரும் சென்ற போது அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே மறைந்திருந்த 8 பேர் கொண்ட கும்பல் 3 பேரையும் வழி மடக்கினர். பின்னர் அவர்கள், 3 பேரையும் உருட்டு கட்டை மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு, பழனி மொபட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், வடவணக்கம்பாடி (பொறுப்பு) போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயம் அடைந்த பழனி, ஏழுமலை, சிவக்குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story