ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஓட்டேரி ஏரியில் ரூ.8 கோடியில் மேம்பாட்டு பணிகள் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஓட்டேரி ஏரியில் ரூ.8 கோடியில் மேம்பாட்டு பணிகள் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 May 2019 10:45 PM GMT (Updated: 18 May 2019 5:20 PM GMT)

ஓட்டேரி ஏரியை மேம்படுத்தி, அழகுப்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அடுக்கம்பாறை, 

வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில், வேலூர் ஓட்டேரி ஏரியும் ஒன்று. நாயக்கனேரி, குளவிமேடு, வாணியங்குளம், மேட்டு இடையம்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து வரும் மழைநீர், ஓடைக்கால்வாய் மூலம் ஓட்டேரி ஏரிக்கு வந்து சேருகிறது. மழைநீர்தான் இந்த ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரம். அப்படி இருக்க வேலூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் வினியோகத்தில் இந்த ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ஓட்டேரி ஏரியில் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 3-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுசென்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக இந்த ஓட்டேரி ஏரி நிரம்பி மறுகால் போனது. ஆனால் சில மாதங்களிலேயே ஏரியில் தண்ணீர் வற்ற தொடங்கி, முழுவதுமாக வறண்டு பாலைவனமானது. பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்ததே தண்ணீர் வற்றியதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஓட்டேரி ஏரியை மேம்படுத்தி அழகுபடுத்துவதற்காக வேலூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஓட்டேரி ஏரியின் கரையை பலப்படுத்துதல், ஏரிக்கரையில் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் கரையில் கற்கள் பதித்தல், கரையின் மேற்புறத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை மற்றும் தடுப்பு கைப்பிடி கம்பிகள் அமைத்தல், ஏரியின் மதகு ஷட்டர்கள் பராமரித்தல், ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருதல், ஓட்டேரி பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது ஏரிக்கரையில் கற்கள் பதித்தல், பூங்கா வளாகத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story