பனப்பாக்கம் அருகே டிராக்டர் மோதி தந்தை-மகன் பலி சிறுவன் படுகாயம்
பனப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் தந்தை - மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிறுவன் படுகாயம் அடைந்தான்.
வேலூர்,
பனப்பாக்கத்தை அடுத்த பள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி (வயது 35), தொழிலாளி. இவருடைய மனைவி கற்பகம். இவர்களுக்கு ஆகாஷ் (7), தினேஷ் (3) என்ற இரண்டு மகன்கள் உண்டு. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ரஜினி அதே பகுதியில் உள்ள ஒருவரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அவருடன் மகன்கள் ஆகாஷ், தினேஷ் ஆகியோரும் சென்றனர். பள்ளூர் கணபதிபுரம் மின்சார வாரிய அலுவலகம் அருகே சென்ற போது எதிரே வேகமாக ஒரு டிராக்டர் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை - மகன்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ரஜினி, தினேஷ் ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஆகாஷ் படுகாயத்துடன் ஆபத்தான நிலையில் இருந்தான். இதை பார்த்த பொதுமக்கள் ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று ரஜினி, தினேஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story