அம்மாபேட்டை அருகே லாரி மோதி பெண் பரிதாப சாவு 108 ஆம்புலன்ஸ் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்
அம்மாபேட்டை அருகே நடந்துசென்ற பெண் மீது லாரி மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார். அப்போது 108 ஆம்புலன்ஸ் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் கொண்ரெட்டி காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி கலா (வயது 55). இவர்கள் 2 பேரும் கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்தநிலையில் நேற்று மதியம் கலா, குருவரெட்டியூர் பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று கலா மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்தியதும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிஓடிவிட்டார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்து கிடந்த பெண்ணை மீட்டனர். மேலும் அவர்கள் செல்போன் மூலம் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் அங்கு வரவில்லை. இதனால் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கலாவை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்தநிலையில் 108 ஆம்புலன்ஸ் வராததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் திடீரென குருவரெட்டியூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சை அழைத்தால் வருவதில்லை. இதனால் பல உயிரிழப்புகள் நடந்து உள்ளன. எனவே அம்மாபேட்டைக்கு என்று தனியாக 108 ஆம்புலன்ஸ் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீசார், 108 ஆம்புலன்ஸ் வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் கையொப்பம் போட்டு எழுதிக்கொடுங்கள். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பின்னர் பொதுமக்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் வேண்டும் என்று எழுதிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story