ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திருமங்கலம் வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் வாக்குச்சாவடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மறு வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ஈரோடு,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. இதில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் முடிந்த பிறகு அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் பாதுகாப்பாக சித்தோடு அருகே உள்ள ஐ.ஆர்.டி.டி. கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வருகிற 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் சட்டமன்ற தொகுதி திருமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அங்கு கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது வாக்குச்சாவடி அதிகாரி, மாதிரி ஓட்டுப்பதிவுகளை அழிக்காமல் ஓட்டுப்பதிவை தொடங்கிய காரணத்தினால் மறு ஓட்டுப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மறு ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக செய்து வந்தனர். ஈரோட்டில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை காங்கேயம் தாலுகா அலுவலகத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஏற்கனவே அனுப்பிவைத்தார். இதில் மறு ஓட்டுப்பதிவுக்காக 2 வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு விவிபேட் கருவி ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், ஓட்டுப்பதிவு தொடங்கும்போது ஏதாவது பழுது ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக கூடுதலாக 3 வாக்குப்பதிவு எந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
திருமங்கலம் வாக்குச்சாவடியில் 918 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு புதிதாக வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் தீவிரமாக செய்து வந்தனர்.
இந்த நிலையில் தேர்தலில் வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்கும் விதமாக நேற்று வெள்ளகோவில் அருகே உள்ள திருமங்கலத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், திருப்பூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன் உள்பட 284 போலீசார் கலந்து கொண்டனர். போலீசாரின் கொடி அணிவகுப்பை திருமங்கலம் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.
இங்கு மறுவாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி மாவட்டம் முழுவதும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. திருமங்கலத்துக்கு வரும் சாலையில் 4 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. உப்புபாளையம் சாலையில் 2 இடங்களிலும், ரெட்டிவலசு, திருமங்கலம் சாலையில் 2 இடங்களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குச்சாவடி அமைந்திருக்கும் ஊருக்கு வரும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன.
இதற்கிடையே நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சி.கதிரவன் திருமங்கலம் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார். அங்கு ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை அவர் நேரில் ஆய்வு செய்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. இதையொட்டி வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story