ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி மாணவி பலி விளையாடிய போது பரிதாபம்
ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பில் வீட்டில் தனியாக விளையாடிய பள்ளி மாணவி, தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதில் பரிதாபமாக இறந்தாள்.
திரு.வி.க.நகர்,
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் வடிவேல். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஹேமா. இவர்களுக்கு அஸ்வதி (வயது 11) என்ற மகள் இருந்தாள். இவள், அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்து, 6-ம் வகுப்புக்கு செல்ல இருந்தாள்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அஸ்வதி, தனது பாட்டி ரமாவுடன் சென்னை ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பில் வசிக்கும் தனது மாமா வினோத்குமார் வீட்டுக்கு வந்து இருந்தாள். வினோத்குமார், பெரம்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.
வீட்டில் விளையாடினாள்
வினோத்குமாரின் மகன் யஷ்வந்துக்கு உடல் நிலை சரி இல்லாததால் பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். மகனுக்கு துணையாக வினோத்குமாரின் மனைவி அங்கேயே உள்ளார். யஷ்வந்தை பார்க்க ரமா மருத்துவமனைக்கும், வினோத்குமார் வேலைக்கும் சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த மாணவி அஸ்வதி, கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு வீட்டில் யஷ்வந்துக்கு கட்டி இருந்த தொட்டில் சேலையில் விளையாடிக்கொண்டிருந்தாள்.
கழுத்தை இறுக்கியதால் சாவு
அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் சேலை, மாணவியின் கழுத்தை இறுக்கியதில் அஸ்வதி பரிதாபமாக இறந்தாள். தற்செயலாக வீட்டுக்கு வந்த அஸ்வதியின் சித்தப்பா ஈஸ்வரன், ஜன்னல் வழியாக இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஐ.சி.எப். போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story