சென்னையில் ஒரு நபருக்கு தினமும் 55 லிட்டர் தண்ணீர் வினியோகம் அதிகாரிகள் தகவல்


சென்னையில் ஒரு நபருக்கு தினமும் 55 லிட்டர் தண்ணீர் வினியோகம் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 19 May 2019 4:45 AM IST (Updated: 19 May 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பல்வேறு தேவைக்காக தினமும் 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதில், ஒரு நாளைக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

சென்னை,

இந்தியாவில் 2020-ம் ஆண்டுவாக்கில் சென்னை உள்பட 21 மாநகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் தீர்ந்துவிடும் நிலை ஏற்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல் வெளியிட்டது. இந்த தகவல் அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. சென்னை மாநகருக்கு, தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமல்லாமல் வடஇந்தியாவில் இருந்தும் ஏராளமானோர் வேலைக்காக வருகின்றனர்.

சுமார் ஒரு கோடி பேர் வரை வசிக்கும் சென்னையின் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து நீர் பெறப்பட்டு வருகிறது. மேலும், கடல்நீரை குடிநீராக்கும் 2 நிலையங்களில் இருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 118 மில்லியன் கன அடி நீரும், சோழவரத்தில் 4 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 28 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் ஒரு மில்லியன் கன அடி நீர் உள்பட மொத்தம் 151 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது.

இதில் சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. மீதம் உள்ள பூண்டி, புழல் ஏரிகளில் ஒரு சில வாரங்களுக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.

அகதிகளாக வாழும் நிலை

இதுகுறித்து திருவல்லிக்கேணியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சென்னையில் பல இடங்களில் நிலத்தடிநீரை அதிக அளவில் உறிஞ்சிவிட்டதால், அங்கெல்லாம் கடல்நீர் ஊடுருவிவிட்டது. தற்போது கடற்கரையோர குடியிருப்பு பகுதிகளில் உப்பு நீர் மட்டுமே கிடைக்கிறது. அடுத்ததாக சென்னையின் மத்திய பகுதிகளிலும் அந்த நிலை ஏற்படும் என்றே தோன்றுகிறது. நிதி ஆயோக் அறிக்கையில் சொல்லும் பற்றாக்குறை என்பதை அழிவு ஏற்பட்டுவிட்டது என்றுதான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்

இதனால் சென்னையில் குறைவாக குடிதண்ணீர் வழங்கப்படுவதால் பலர் கேன் தண்ணீருக்கும் செலவு செய்கின்றனர். இன்னும் 2 ஆண்டுகளில் அன்றாடத் தேவைகளுக்கும் தண்ணீரை காசுகொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டால், பல குடும்பங்கள் தண்ணீரைத் தேடி இடம்பெயரும் சுற்றுச்சூழலும், அகதிகளாக வாழவேண்டிய நிலையும் வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மழைநீர் சேகரிப்பு

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை மாநகரை பொறுத்தவரையில் தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது ஏரிகள் வறண்டு விட்டதால் பல்வேறு வழிகளில் இருந்து பெறப்படும் குடிநீரில் 550 மில்லியன் லிட்டர் மட்டுமே தினசரி வழங்கப்படுகிறது. இதில் சென்னையில் சராசரியாக உள்ள 1 கோடி பேருக்கு நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க கடல்நீரைக் குடிநீராக்க தற்போது உள்ள 2 நிலையங்களோடு மேலும், 2 நிலையங்கள் வர உள்ளன. குறைந்தபட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி பராமரிப்பதை ஒவ்வொரு வீட்டிலும் உறுதிப்படுத்தினால், நிலத்தடிநீர் மட்டம் உயரும். அரசின் முயற்சியோடு, பொதுமக்களின் முயற்சியும் அவசியம் தேவைப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

ஐ.நா.சபை அறிவுறுத்தல்

இதுகுறித்து நீர்வள மேலாண்மை நிபுணர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் கூறியதாவது:-

ஐ.நா.சபை அனைத்து பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் ஒரே மாதிரி அளவில் தண்ணீர் வினியோகம் செய்ய கூறவில்லை. இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. குறைந்தபட்சம் ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 76 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக வழங்க வேண்டும் என ஐ.நா.சபை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இதை எங்கும் முறையாக கடைப்பிடிக்கவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரையில் சிலருக்கு தினசரி 500 லிட்டர் கிடைக்கிறது. சிலருக்கு 5 லிட்டர் கூட கிடைப்பதில்லை. குறிப்பாக சென்னையின் பல பகுதியில் காசு கொடுத்து குடத்தில் தண்ணீர் வாங்க பொதுமக்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால் லாரிகள் தான் முறையாக வருவதில்லை. பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்ற நிலை தான் இருக்கிறது.

மனித தவறு

மழை பெய்யும் போது தண்ணீரை சேமிக்காமல், கடலில் விட்டுவிட்டதால் ஏற்பட்ட விளைவு தான் தற்போது ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது. தண்ணீர் மிகுந்த நம் மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் வரக்கூடாது. இருப்பினும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கு காரணம் மனித தவறு தான். இதை மாற்றி வரும் காலங்களில் மழைநீரை முறையாக சேமிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story