அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார், 6 தங்கும் விடுதிகள் பூட்டி ‘சீல்’ வைப்பு
அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து 6 தங்கும் விடுதிகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் உரிய அனுமதி இன்றியும், அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் கூடுதலாக கட்டப்பட்ட 250-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், தங்கும் விடுதிகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. இதனிடையே அனுமதி இல்லாமல் செயல்படும் தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக நகராட்சி ஆணையாளர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் எம்.எம். தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வசூல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று சுற்றுலா பயணிகள் வெளியேறிய உடன் தங்கும் விடுதியை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
அதேபோல நகரின் பல்வேறு பகுதிகளிலும் அதிக கட்டணம் வசூல் செய்த 5 தங்கும் விடுதிகளை நகராட்சி நகரமைப்பு அலுவலர் பெரியசாமி, ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். அதேபோல் சுற்றுலா பயணிகளை ஏமாற்றி அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அந்த தங்கும் விடுதிகள் பூட்டி சீல் வைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story