சூலூர் இடைத்தேர்தல், ஓட்டுப்பதிவுக்கு 324 வாக்குச்சாவடிகள் தயார் - காலை 7 மணிக்கு தொடங்குகிறது


சூலூர் இடைத்தேர்தல், ஓட்டுப்பதிவுக்கு 324 வாக்குச்சாவடிகள் தயார் - காலை 7 மணிக்கு தொடங்குகிறது
x
தினத்தந்தி 19 May 2019 4:15 AM IST (Updated: 19 May 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

சூலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 324 வாக்குச்சாவடிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.

சூலூர்,

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர்களால் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சூலூர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 397 பேர் ஆண்கள். 1 லட்சத்து 49 ஆயிரத்து 743 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் உள்ளனர்.

பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சூலூர் தொகுதியில் 121 இடங்களில் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 32 இடங்களில் உள்ள 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு துணை ராணுவத்தினர் 212 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். சூலூர் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வீதம் 648 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 324 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 324 வி.வி.பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்) பயன்படுத்தப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்காக 324 சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் மையம் எது என்பதை எளிதாக கண்டறிய ஏற்கனவே பூத் சிலிப்புகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினருடன், கூடுதலாக ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் 2 போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 191 வாக்குச்சாவடிகளில் ‘வெப்’ கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக பார்வையிட முடியும். வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு பணியாளர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சூலூர் தொகுதியில் 324 வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஸ்டிராங்க் அறையில் சீல் வைக்கப்பட்டு இருந்தது. சூலூர் தொகுதி தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணன், உதவி தேர்தல் அதிகாரி ஜெயராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன், மத்திய தேர்தல் பார்வையாளர் அருண்குமார் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அறையின் சீல் திறக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நேற்று மதியம் தொடங்கியது. எந்திரங்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஓட்டுப்பதிவுக்கு தேவையான மை உள்ளிட்ட 82 வகையான பொருட்களும் அனுப்பப்பட்டது. வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்கள் நேற்று இரவே தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்றனர். சூலூர் தொகுதியில் தேர்தல் நுண்பார்வையாளர்கள் 324 பேரும், கூடுதல் பார்வையாளர்கள் 400 பேரும், 9 நிலையான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தலின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 3,423 போலீசார் இந்த தொகுதியில் வாக்குச்சாவடிகள் மற்றும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். இதில் ஊர் காவல்படையை சேர்ந்த 500 பேரும், சிறப்பு படை போலீசார் 590 பேரும் அடங்குவார்கள். சூலூர் தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.

சூலூர் போலீஸ் நிலையம் முன்பு இருந்து தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு ஆஸ்பத்திரி வீதி, கலங்கல் பாதை, சூலூர் சந்தை, அண்ணா கலையரங்கம் வழியாக மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது.

சூலூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் அமைதியான முறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. 324 வாக்குச்சாவடிகளிலும் 1,800 ஊழியர்கள் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அழியாத மை உள்ளிட்ட 82 வகையான பொருட்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த தொகுதியில் கதிர்மில்ஸ் பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடியும், கண்ணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெண்கள் மட்டுமே ஊழியர்களாக உள்ள ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளன. 102 பேருக்கு தபால் ஓட்டுக்களுக்கான விண்ணப்ப படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை 16 பேர் தபால் வாக்குகளை பதிவு செய்து வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சூலூர் தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், துணை ராணுவத்தினர் சூலூர் போலீஸ் நிலைய வளாகத்தில் குவிக்கப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், கூடுதல் சூப்பிரண்டு மாடசாமி மேற்பார்வையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு தேவையான போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 6 மணிக்கு மேல் ஓட்டு போட வாக்குச்சாவடியில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டுப்பதிவு நடைபெறும்.

ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக் கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து வாக்களிக்க வசதியாக, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. சக்கரநாற்காலியும் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக, தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story