மோசடியில் ஈடுபட்ட தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்து, இறையூரில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்


மோசடியில் ஈடுபட்ட தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்து, இறையூரில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 19 May 2019 4:15 AM IST (Updated: 19 May 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

மோசடியில் ஈடுபட்ட தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்து, இறையூரில் கரும்பு விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த இறையூர் மற்றும் ஏ.சித்தூர் ஆகிய இடங்களில் 2 தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்த ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தெரியாமல், அவர்களது பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆலை நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இறையூரில் உள்ள சர்க்கரை ஆலை முன்பு நேற்று விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு சங்க பொருளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் ரவீந்திரன், மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாநில குழு உறுப்பினர் காமராஜ், சங்க தலைவர் கொளஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

போராட்டமானது, விவசாயிகள் பெயரில் கடன் வாங்கிய ஆலை உரிமையாளர் மீதும், உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 2017-18ம் ஆண்டு அரவை பருவத்தில் 2 ஆலைகளில் இருந்தும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையான ரூ. 82 கோடியை வட்டியுடன் வழங்க கோரியும், இவ்விரு சர்க்கரை ஆலைகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்,

மேலும், மாநில அரசு அறிவித்த கரும்புக்கான ஆதரவு விலை கடந்த 4 ஆண்டுகளாக மொத்தம் ரூ.115 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது, இதை உடனடியாக வழங்கிட வேண்டும், ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் 8 மாத ஊதிய பாக்கியை வழங்க கோரியும் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் ஆலை நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பெண்ணாடம் ராஜலெட்சுமி, விருத்தாசலம் சாகுல்அமீது மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story