விருத்தாசலம் அருகே, குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலம் அருகே, குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 May 2019 4:00 AM IST (Updated: 19 May 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது படுகளாநத்தம் கிராமம். இங்கு 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மினி குடிநீர் தொட்டி ஆகியன மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து இந்த தொட்டிகளில் நீரேற்ற பயன்படும் மின்மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த கிராமத்திற்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

எனவே அந்த பகுதி மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறார்கள். கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரையில் அவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே காலி குடங்களுடன் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கண்டன கோஷங் களை எழுப்பினர். இவர்களது போராட்டம் பற்றி அறிந்தும், அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் இனியும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தரப்பில் தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story