மேல்மலையனூர் அருகே, வீடு புகுந்து திருடிய 3 கொள்ளையர்கள் கைது - 25 பவுன் நகை, பணம் மீட்பு
மேல்மலையனூர் அருகே வீடு புகுந்து திருடிய 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகை, பணம் மற்றும் கார் ஆகியவை மீட்கப்பட்டன.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே உள்ள அவலூர் பேட்டை கடைவீதி மற்றும் கடப்பனந்தல் கிராமம்ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.
இந்த நிலையில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்ற கொள்ளையர்களை பிடிக்க விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு அறிவுரை வழங்கினார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, அவலூர் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டுகள் முனுசாமி, ஞானபிரகாசம், ரமணன் மற்றும் போலீஸ்காரர்கள் சுந்தரமூர்த்தி, செல்வம், சண்முகம்ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் இரவு பகலாக கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். அப்போது சித்தேரி முருகன்கோவில் அடிவாரம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கல்நகர், மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த அன்சாரி மகன் கார்த்தி என்கிற அப்துல்அமீது, எல்லுக்குட்டை, மாரியம்மன் கோவில் 2-வது தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் நடராஜன், பள்ளிகொண்டாப்பட்டு கிராமம் மந்திரிகுட்டை தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் தங்கவேலு(வயது 32) என தெரியவந்தது.
மேலும் அவலூர்பேட்டை, கடப்பனந்தல் கிராமங்களில் இரவு நேரம் வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். வீடுகளில் கொள்ளையடித்த 25 பவுன் நகைகள், ரூ.53 ஆயிரம் ரொக்கம், கார் ஆகியவற்றை மீட்டனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும்.
Related Tags :
Next Story