கோத்தகிரி அருகே, முதுகில் குட்டிகளை சுமந்தவாறு தேயிலை தோட்டத்தில் உலா வரும் கரடி - கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை


கோத்தகிரி அருகே, முதுகில் குட்டிகளை சுமந்தவாறு தேயிலை தோட்டத்தில் உலா வரும் கரடி - கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 19 May 2019 4:30 AM IST (Updated: 19 May 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே முதுகில் குட்டிகளை சுமந்தவாறு தேயிலை தோட்டத்தில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்களை அழித்தும், வனப்பகுதியை ஒட்டியும் விதிமுறைகளை மீறி ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் சொகுசு விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் வனவிலங்குகளின் வாழிடம் குறைந்து வருவதுடன், அவற்றின் வழித்தடமும் மறிக்கப்பட்டு வருகிறது. இதனால் காட்டெருமை, புலி, கரடி, சிறுத்தைப்புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

அளக்கரை பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டம் ஒன்றில் கடந்த 11-ந் தேதி தனது முதுகில் 2 குட்டிகளை சுமந்தவாறு தாய் கரடி ஒன்று பகல் நேரத்திலேயே உலா வந்தது. திடீரெனெ 3 கரடிகள் தேயிலை தோட்டத்தில் நின்று கொண்டிருப்பதை கண்ட தோட்ட தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். நீண்டநேரம் தேயிலை தோட்டத்திற்குள் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்த கரடிகள் பின்னர் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றன.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பகல் நேரத்திலேயே அதே கரடி தனது 2 குட்டிகளுடன் அளக்கரை அருகே உள்ள பெப்பேன் மற்றும் கண்ணாவரை ஷெட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை, பெப்பேன், சேலாடா, மூணுரோடு, கேத்தரின் நீர்வீழ்ச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கரடிகள் நடமாடி வருகிறது. இதனால் பணிக்கு செல்லும் தொழிலாளர்களும், பொதுமக்களும் அச்சத்துடன் வெளியே சென்று வர வேண்டிய நிலை உள்ளது. குட்டிகளுடன் தாய் கரடி உலா வருவதால் தனது குட்டிகளுக்கு மனிதர்களால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்களை கண்டால் ஆக்ரோஷத்துடன் தாக்க வருகிறது. எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன் வனத்துறையினர் அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story