ஓ.பன்னீர்செல்வம் மகனை எம்.பி. என்று குறிப்பிட்டு கோவிலில் கல்வெட்டு வைத்த போலீஸ் ஏட்டு கைது - அ.தி.மு.க. நிர்வாகி புகாரின் பேரில் நடவடிக்கை


ஓ.பன்னீர்செல்வம் மகனை எம்.பி. என்று குறிப்பிட்டு கோவிலில் கல்வெட்டு வைத்த போலீஸ் ஏட்டு கைது - அ.தி.மு.க. நிர்வாகி புகாரின் பேரில் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 May 2019 11:00 PM GMT (Updated: 18 May 2019 7:57 PM GMT)

தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே ஓ.பன்னீர்செல்வம் மகனை எம்.பி. என்று குன்னூரில் உள்ள கோவிலில் கல்வெட்டு வைத்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார். அ.தி.மு.க. நிர்வாகி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் காசி அன்னபூரணி கோவில் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த கோவிலில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரம் கும்பாபிஷேகம் கடந்த 16-ந்தேதி நடந்தது. இதையொட்டி கோவிலில் 2 கல்வெட்டுகள் திறக்கப்பட்டன. அதில் ஒரு கல்வெட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மற்றொரு கல்வெட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன்கள் ப.ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்று இருந்தன. இதில் ஜெயபிரதீப் என்பதற்கு பதில் ஜெயபிரதீப்குமார் என்று இருந்தது. அத்துடன் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் பெயருக்கு முன்பு, ‘தேனி பாராளுமன்ற உறுப்பினர்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவர், தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையே நடக்காத நிலையில் அவரை எம்.பி.யாக சித்தரித்து கல்வெட்டு வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து நேற்று முன்தினம் அந்த கல்வெட்டு மீது மற்றொரு கல்வெட்டு வைத்து பெயர் மறைக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அ.தி.மு.க. சார்பில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் நேற்று ஒரு புகார் அளிக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்தின் மைத்துனரும், தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாரின் தேர்தல் முகவருமான சந்திரசேகரன், தேர்தல் செலவு கணக்கு முகவர் பிரகாஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனுவை அளித் தனர்.பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த கல்வெட்டு வைத்தது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது. எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக விரோதிகளின் தூண்டுதலால் விஷமத்தனமாக இந்த கல்வெட்டு வைக்கப்பட்டு உள்ளதாக எண்ணுகிறோம். கல்வெட்டு வைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த அவதூறான தகவல் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளோம்’ என்றனர்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகனுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கல்வெட்டு வைத்ததாக குச்சனூரை சேர்ந்த சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகியான வேல்முருகன் (வயது 48) என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.

கைதான வேல்முருகன் போலீஸ் ஏட்டாக பணியாற்றி கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டவர் ஆவார். அவர் நீச்சல், சாகசங்களில் பல்வேறு சாதனைகள் படைத்தவர் என்பதோடு, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிராகவும் போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story